ஊரடங்கு காலத்தில் மின் கணக்கீடு முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஊரடங்கின் காரணமாக, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மின் கணக்கீடு என்பது நடைபெறவில்லை. பிப்ரவரி மாதம் என்ன மின் கட்டணம் செலுத்தப்பட்டதோ, அதே மின் கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதத்திற்கு செலுத்தலாம் என்றும், பின்னர் மின் கணக்கீடு எடுக்கப்பட்டு, தொகை சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது மின் வாரியம். ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு எடுக்கப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு, மின் வாரியத்தின் கணக்கிடும் முறையில் எந்த விதி மீறலும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தநிலையில், அனைத்து தரப்பினருக்குமே, மின் கட்டணம் என்பது பலமடங்காக தற்போது அதிகரித்துள்ளது. இதனால், ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனுதாரர் எம்.எல். ரவி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மறுஆய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு, அம்மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.