Skip to main content

சுப்பிரமணியசாமி, செந்தில்பாலாஜி, செல்வகணபதி மற்றும் மைதீன்கான் மீது அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகள் ரத்து!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

chennai high court tamilnadu government


முதல்வர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக, சுப்பிரமணியசாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

 

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவரைப் பற்றியும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அரசு குறித்தும், அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், அவர்களுக்கு எதிராக, தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

 

தங்களுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எம்.பி, தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, எஸ்.ஆர்.பார்த்திபன், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், தி.மு.க. எம்.எல்.ஏ. மைதீன் கான், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

 

இந்த வழக்குகள், நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர்களுக்கு எதிராக,  தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடர முடியாது. முதல்வரின் துறை சார்ந்த நடவடிக்கைகளை விமர்சித்தால் மட்டுமே, அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடர முடியும். அதன்படி, முதல்வரை தனிப்பட்ட முறையில் மட்டுமே விமர்சித்ததாக சுப்பிரமணியசாமிக்கு எதிரான 4 அவதூறு வழக்குகள், செந்தில் பாலாஜிக்கு எதிரான 2 வழக்குகள், செல்வகணபதிக்கு எதிரான 2 வழக்குகள், மைதீன் கானுக்கு எதிரான ஒரு வழக்கு ஆகியவற்றை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கனிமொழி, டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை வெவ்வேறு தேதிகளுக்குத் தள்ளிவைத்தார்.

 

சார்ந்த செய்திகள்