தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட கரூர் சட்டமன்றத் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றக் கோரி கரூர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி அமர்வு முன்பு இன்று (26/04/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வாக்குப்பதிவின்போது கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின்போதும் கரூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு தலைமை நீதிபதி அமர்வு, “கரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். அரசியல் கட்சிகளும் இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே கரோனா பரவலுக்கான காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. பிரச்சாரம் நடந்தபோதெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? கரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிடில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும். வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, சுகாதாரத்துறைச் செயலாளர், இயக்குநர் ஆகியோரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
மேலும், ஏப்ரல் 30ஆம் தேதி அன்று, வாக்கு எண்ணிக்கையின்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த அறிக்கையையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.