மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நாய் கடித்தும், பிளாஸ்டிக்கை சாப்பிட்டும், சாக்கடையில் விழுந்தும் ஐந்து மான்கள் இறந்துள்ளதாக, தமிழக வனத்துறை தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்துக்குள் இருந்த ஆயிரத்து 500 மான்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. எந்த ஆய்வுகளும் நடத்தாமல் மான்களை இடமாற்றம் செய்ய அனுமதிக்கக்கூடாது எனக் கூறி, முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மான்களை இடமாற்றம் செய்ய அனுமதித்ததுடன், அதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெரும்பாலான மான்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்த 20 மான்களில், ஐந்து மான்கள் நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிட்டும், சாக்கடையில் விழுந்தும் இறந்து விட்டதாகவும், எஞ்சியுள்ள 15 மான்களை பத்திரமாகப் பிடித்து இடமாற்றம் செய்ய இருப்பதால், அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 2021 ஜனவரி 21- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.