Skip to main content

அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு!- சிறைத் தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி மேல்முறையீடு!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்,  ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, தண்டிக்கப்பட்ட குற்றவாளி உமாபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
 

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பாபு என்பவர் இறந்துவிட்டதால், மீதமுள்ள 16 பேர் மீதான வழக்கை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

CHENNAI Ayanavaram JUDGEMENT HIGH COURT

இந்த வழக்கில் பிப்ரவரி 3-ம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தது. மீதமுள்ள 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
 

இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட உமாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எலக்ட்ரீசியனாகப் பணியாற்றிய தன்னை, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையில், பிளம்பர் என குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இடம் பெறவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் நிராகரித்திருக்க வேண்டும் என்றும், தனக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனையான ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். மேலும், தண்டனையை நிறுத்தி வைத்து, தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்