கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பகுதியில் உள்ள பழக்கடைகளில் மாம்பழம், வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை, விரைவில் பழுப்பதற்காக இயற்கைக்கு மாறாக இரசாயனம் கலந்து பழுக்க வைத்து அதனைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார்கள் சென்றுள்ளன.
அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கைலேஷ்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியன், பெண்ணாடம் போலீசார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெண்ணாடம் கடைவீதி மற்றும் மீனவர் தெரு பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண்ணாடம் மீனவர் தெருவில் உள்ள சின்னதுரை (வயது 55) என்பவரது குடோனை சோதனை செய்ய சென்றபோது அவரது பழ குடோன் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சின்னதுரையின் மருமகள் வனிதாவை வரவழைத்து அவர் முன்னிலையில் குடோனின் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடோனில் 70 பெட்டிகளில் மாம்பழங்கள் மற்றும் 20 வாழைத்தார்கள் உள்ளிட்ட சுமார் ஒரு டன் அடங்கிய 26 பெட்டிகளில் இருந்த மாம்பழங்களைப் பழுக்க வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து பெண்ணாடம் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து இயற்கைக்கு மாறாக பழுக்க வைத்த மாம்பழங்கள் அனைத்தையும், அதனைப் பழுக்க வைக்கப் பயன்படுத்திய ரசாயனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரசாயனங்கள் பயன்படுத்தி பழங்களைப் பழுக்கவைத்த குடோனை பூட்டி 'சீல்' வைத்தனர்.