ஆந்திர வனப்பகுதியில் இருந்து ஒற்றை சிறுத்தை தமிழக எல்லை மாவட்டமான வேலூர்க்குள் புகுந்துள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே சிக்கனாங்குப்பம், அழிஞ்சிகுளம், ஈச்சங்கால், தும்பேரி, அரபாண்டகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சிறுத்தை ஒன்று கடந்த 7 நாட்களாக வழித்தவறி சுற்றித்திரிகிறது. முதலில் கன்று குட்டி, பின்னர் 5 பொதுமக்கள், பின்னர் ஆடுகளை தாக்கிய சிறுத்தையால் இப்பகுதி மக்கள் பயந்துபோய்வுள்ளனர்.
சிறுத்தை மக்களை பார்த்து பயப்படுகிறது, மக்கள் சிறுத்தையை பார்த்து பயப்படுகின்றனர். இதனால் தங்களது நிலங்களுக்கு சென்று விவசாயம் பார்க்கவும் பயப்படுகின்றனர். அதோடு, தங்களது ஊரில் இருந்து வெளியூர் செல்லவும் பயப்படுகின்றனர். பொதுமக்களே இரவு நேரத்தில் நெருப்பு மூட்டியும், பட்டாசு வெடித்தும் ஊருக்குள் சிறுத்தை வராமல் இருக்க பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் மண்டல வன அலுவலர் சேவாசிங் தலைமையில் வனத்துறையினர் குழு சிறுத்தையால் பாதிக்கப்பட்டுள்ள கிராம பகுதியில் முகாமிட்டுள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறுத்தையை பிடிக்க வன ஊழியர்கள் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 5 இடங்களில் கூண்டுகள் அமைத்து 12 நாளாக சிறுத்தையை பிடிக்க முயற்சிகளை செய்து வருகின்றனர். பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டமிருந்தால் உடனடியாக தகவல் தெரிவித்தால் மயக்க மருந்து செலுத்தி அதனை பிடிக்கும் முயற்சியிலும் உள்ளோம் என்றார்.
அதோடு, வனத்துறையின் சார்பில் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது, சிறுத்தை ஊருக்குள், நிலத்துக்குள் வந்து தாக்குகிறது எப்படி பயப்படாமல் இருப்பது என கேள்வி கேட்கின்றனர் அப்பகுதி மக்கள்.