Skip to main content

கன்னத்தில் “பளார்” என்று அறைவது போல் அ.தி.மு.க. அரசை சாடியிருக்கிறார்: துரைமுருகன்

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
கன்னத்தில் “பளார்” என்று அறைவது போல் அ.தி.மு.க. அரசை சாடியிருக்கிறார்: துரைமுருகன் அறிக்கை

தமிழகத்தில் திறமையான இளைஞர்கள் இருந்தும் தொழில் முதலீட்டாளர்கள், இங்கு முதலீடு செய்வது குறித்து யோசிக்கிறார்கள் என்று கன்னத்தில் “பளார்” என்று அறைவது போல், அ.தி.மு.க. அரசை சாடியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் என்று திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமபான துரைமுருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
சட்டமன்றத்தில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், நானும், நம் கழக உறுப்பினர்களும் தொழில் துறை தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் நலிவு அடைந்து வருகிறது;  புதிய தொழில் முனைவோர் எவரும் தமிழகத்திற்கு வருவதில்லை;  தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்று வரும் தொழில்களையும், அதன் முதலாளிகள் பக்கத்தில் உள்ள ஆந்திராவுக்கு கொண்டு போகிற காரியத்தை,  நித்தம் நித்தம் செய்து வருகிறார்கள் என்று பேசியபோது, தொழில் துறையை வைத்திருக்கின்ற அமைச்சர் சம்பத்தும் மற்ற அமைச்சர்களும் வரிந்துக் கட்டிக் கொண்டு எழுந்து நின்று எங்களோடு மல்லுக்கு நின்றார்கள். ‘ஒரு தொழிலும், வேறு மாநிலத்திற்கு போகவில்லை.  நாங்களா போக விடுவோம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது தொழில்கள் இங்கே’ என்று கவி பாடி பதில் அளித்தார்கள்.

‘வென்றவன் சொல்வது வேதம்’ என்று சபையும் போய் கொண்டிருந்தது. சட்டமன்றத்தில் நங்கள் மட்டுமல்ல. சில மனசாட்சி உள்ள நடுநிலை ஏடுகளும் அவ்வப்போது, தொழில்கள் புலம் பெயரும் செய்தியை எழுதிக் கொண்டுதான் இருந்தன. ஆனாலும், அ.தி.மு.க. அமைச்சர்கள் மறுப்புரைப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இன்று (14-8-2017) வெளிவந்த ‘இந்து’ ஆங்கில ஏட்டிலும்;  ‘தி இந்து’ தமிழ் ஏட்டிலும் அ.தி.மு.க. அரசின் முகத்தில் அறைவதைப்  போல், அ.தி.மு.க.வின் “காட் பாதராக” விளங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்தில் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்.

“இங்கு திறமையான இளைஞர்கள் இருந்தும் தொழில் முதலீட்டாளர்கள், இங்கு முதலீடு செய்வது குறித்து யோசிக்கிறார்கள்.  தமிழ்நாட்டை நோக்கி வரும் முதலீடுகள் வேறு மாநிலத்திற்க செல்கின்றன. தமிழகத்திற்கு முதலீட்டாளர்கள் அதிகம் வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.”
இது தமிழில் வந்த செய்தி.

“Analyse why industries are moving to other states.  Focus on manufacturing sector”, Sitaraman tells Tamilnadu.

“Union Minister Nirmala Sitaraman on Sunday urged the Tamil Nadu Government to be proactive in attracting investments and analyse why investors are moving to other states”

இது “Hindu” ஆங்கில நாளேட்டில் வந்தசெய்தி.

இப்படி கன்னத்தில் “பளார்” என்று அறைவது போல், அ.தி.மு.க. அரசை சாடியிருப்பவர், சாதாரணமானவர் அல்ல!  மத்திய அமைச்சர்.  அதுவும் தொழில்துறை அமைச்சர்.  அவருக்கு இந்தியா முழுவதும் தொழில் நிலைமை புரியும். 

அதிலும், அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவசரப்பட்டு கருத்துக்களை சொல்லக்கூடியவர் அல்ல.  மெத்தப் படித்தவர்.  தமிழகத்தைப் பற்றியும் தெரியும். எதையும் ஆழ்ந்து சிந்தித்து பேசக் கூடியவர்.  டி.வி. விவாதங்களிலேயே பார்த்திருக்கலாம். யார் எவ்வளவு எரிச்சலூட்டினாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், பிரச்சினைகளை ஆழ்ந்து சிந்தித்து பதில் அளிக்கக் கூடியவர்.

அவரே,  சொல்லுகிறார் ‘தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழில்கள் எல்லாம் வேறு மாநிலத்திற்கு போகிறது’ என்று. அப்படி சொல்லக்கூடிய தகுதி படைத்தவர் அவர்.

“அம்மாவின் ஆட்சி - ஆட்டுக்குட்டியின் மாட்சி” இவ்வாறான பதில் எல்லாம் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் எடுபடாது. இந்தியாவில் தொழில்கள் குறித்த புள்ளி விவரம் அவர் கையில்!

இப்பொழுதாவது நாடு தெரிந்து கொள்ளட்டும் - சட்டமன்றத்தில் எங்கள் தளபதி தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் எப்படி புள்ளி விவரங்களோடு பேசுகிறார்கள் என்று!

சார்ந்த செய்திகள்