வடமாவட்டங்களில் பிரபலமான மயானக் கொள்ளை திருவிழா வேலூரின் மிக முக்கியமான பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகவும் உள்ளது. பாலாற்றங்கரையில் மயானக்கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மார்ச் 9ஆம் தேதி மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இத்திருவிழாவையொட்டி வேலூர், விருதம்பட்டு, சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, கழிஞ்சூர் மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து பிரமாண்ட தேர் மூலம் ஊர்வலமாக பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு எடுத்து வந்தனர்.
ஊர்வலத்தின் பின்னேயும் முன்னேயும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் போல வேடமிட்டு சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாக சென்றதும் பார்ப்பதற்கு தத்ரூபமாக அமைந்து மெய் சிலிர்க்கச் செய்தது.
ஊர்வலத்தில் இளைஞர்கள் இளம் பெண்கள், சிறுவர்கள் டி.ஜே.பாடல்களை ஒலிக்கவிட்டு குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். சில ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டு, சிலர் எலும்பு துண்டுகளை வாயில் கவ்விய படியும், ஆட்டுக் குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் சென்றது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதில் விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர், வெண்மணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு வேலூர் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக வந்து சூறையாடல் நடைபெற்றது. சூறையாடல் முடிந்து 3 தேர்களும் திரும்பும் சமயம் மோட்டூர், வெண்மணி பகுதியை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் எதிர்பாராதவிதமாக சரிந்து கீழே விழுந்தது. தேர் சரிவதை பார்த்து அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடி தப்பினர். ஆனாலும் வெண்மணி பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (30) என்பவர் சிக்கிக்கொண்டார். அவரின் அலறலை கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லேசான காயங்களுடன் அவர் சிகிச்சைபெற்று வருகிறார்.
பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணல் மற்றும் அங்கு செய்யப்பட்டிருந்த உருவ பொம்மைகளால் தேர் நிலை தடுமாறி கீழே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. நல்லவேளை பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.