வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. மேலும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர் இது வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் புயலாக நிலவக்கூடும்.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (30.11.2023) மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 2 ஆம் தேதி கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.