கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில், நீலகிரி, கோவையிலும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றும் (24.07.2021) தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நியம்பியுள்ளதால், இரண்டாவது நாளாக பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.