Skip to main content

திமுக சேர்மன் வேட்பாளரின் சாதி சான்றிதழ் மோசடியா? –தேர்தல் நிறுத்தலுக்கு பின் உள்ள ரகசியம்

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

 


திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம் 28 கவுன்சிலர்களை கொண்டது. இதில் திமுக தரப்பில் 17 கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் 11 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தின் தலைவர் பதவி பழங்குடியின பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்ட பின், முதல் முறை ஒன்றிய குழு தலைவர் தேர்தல் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடைபெற்றபோது, திமுக கவுன்சிலர்களை அலுவலகத்துக்குள் போக விடாமல் அதிமுகவினர் போராட்டம் செய்ய போலிஸார் தடியடி நடத்தினர். அப்போது, தேர்தல் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என காவல்துறை சொன்னதால் தேர்தலை ஒத்திவைத்தார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி. இதனால் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடைபெறவில்லை.

 

 thandarampattu



இதற்கிடையே திமுக சார்பில் தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவருக்கு, வானாபுரத்தை சேர்ந்த பரிமளா என்பவரை முன்நிறுத்துகிறது திமுக. இவர் பழங்குடியின பெண்ணல்ல, பொய்யான தகவல்களை தந்து எஸ்.டி சாதி சான்றிதழ் பெற்று தேர்தலில் நின்று கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார் என்கிற பிரச்சனையை அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் செல்வி, லதா இருவரும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தந்தனர். இது தொடர்பாக தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் கவுன்சிலர் பரிமளாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் உடனே சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதுதொடர்பாக, எந்த மேல் நடவடிக்கையும் எடுக்ககூடாதுயென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 


இது நடந்துக்கொண்டுயிருந்த நிலையில், நிறுத்திவைக்கப்பட்ட இடங்களுக்கான தேர்தல் ஜனவரி 30ந் தேதி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 17 திமுக கவுன்சிலர்களும் தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றபோது, தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நிர்வாக பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்படுகிறது என அறிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியான திமுக கவுன்சிலர்கள் 17 பேரும், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. கிரி தலைமையில், மூத்த வழக்கறிஞர்கள் பழனி, மனோகரன் ஆகியோரோடு வந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கந்தசாமியை சந்தித்து மனு அளித்துவிட்டு சென்றனர்.




சான்றிதழ் குறித்து நாம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, சேர்மன் வேட்பாளராக எங்கள் கட்சி சார்பில் முன்னிறுத்தப்படும் பரிமளா என்பவர், திமுகவின் வேலூர் – திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் தம்பி மருமகள். தற்போது திமுக மாவட்ட வழக்கறிஞர் அணியில் உள்ள வழக்கறிஞர் கதிரவனின் தம்பி மனைவி. இவர்கள் குடும்பத்தை சேர்ந்த பலரும் தற்போது திமுகவில் பதவிகளில் உள்ளார்கள், நன்றாக படித்தவர்கள். இவர்கள் குரும்பகவுண்டர் என்கிற சாதியை சேர்ந்தவர்கள். இந்த சாதியினருக்கு அரசு ஆவணங்களின்படி எம்.பி.சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதே குடும்பத்தை சேர்ந்த பரிமளா மட்டும் குரும்பன்ஸ் என்கிற சாதி அதாவது பழங்குடியின சாதியெனச்சொல்லி எஸ்.டி சான்றிதழ் வாங்கி வைத்திருந்துள்ளார்.
 


பரிமளா, பெண்கள் பொது வார்டில் வானபுரத்தில் நின்றார். இதனால் சாதி சான்றிதழ் குறித்து தேர்தலின்போது அதிகாரிகள் மற்றும் அதிமுகவினர் உட்பட யாரும் கேள்வி கேட்கவில்லை. திமுக சார்பில் தேர்தலில் நின்ற 3 எஸ்டி வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தனர். பொது வார்டில் நின்று வெற்றி பெற்று கவுன்சிலரான பரிமளா, நான் எஸ்.டி தான் எனக்கு சேர்மன் சீட் தாங்கள் என சான்றிதழை, திமுக மா.செ வேலுவிடம் காட்டி ஒப்புதல் வாங்கினார். இவர் தான் சேர்மன் கேண்டிடேட் என்ற பின்பே அதிமுக பிரமுகர்கள் எம்.பி.சி எப்படி எஸ்.டியாக முடியும் என பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள்.


 

இந்த பிரச்சனையை மா.செவாக உள்ள வேலு சுலபமாக தீர்த்துயிருக்கலாம், ஆனால் ஏனோ அவர் இதில் அமைதியாகவுள்ளார். அந்தம்மா சரியாகதான் சான்றிதழ் வாங்கியுள்ளார் என்றால், அதனை நிருபித்தபின் வேண்டும்மென்றால் சேர்மன் பதவியில் அவரை அமர்த்தியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு ஆளும்கட்சியோடு வீம்புக்கு மோதிக்கொண்டுள்ளார்கள். 17 கவுன்சிலர்கள் என பெரும் மெஜாரிட்டியோடு வெற்றி பெற்றுயிருந்தும் சேர்மன், துணை சேர்மன் பதவியில் திமுக அமர முடியாமல் உள்ளது என கவலையை தெரிவித்தார்கள். 

 

பொய்யான தகவல்களை கூறி எஸ்.டி சான்றிதழ் வாங்கியதாக கூறப்படும் கவுன்சிலர் பரிமளாவிடம் நாம் இதுக்குறித்து கேட்டபோது, நான் குரும்பன்ஸ் சாதி தான் என்றவரிடம், உங்க உறவுக்காரர்கள் அனைவரும் குரும்ப கவுண்டர் எனச்சொல்கிறார்கள், நீங்கள் மட்டும் எப்படி குரும்பன்ஸ் ஆக முடியும் என கேட்டதும், நான் குரும்பன்ஸ் தான், நீங்க ஏன் அதை கேட்கறிங்க என கோபமாக சொல்லிவிட்டு சென்றார்.
 

தாங்கள் சேர்மனாக திமுகவின் ( எஸ்டி ) வேட்பாளர்களை தோற்கடித்தவர்கள், இப்போது அதன் பலனை அனுபவித்துக்கொண்டுள்ளார்கள் என்கிற குரல் திமுகவிலேயே கேட்கிறது. 
 

சார்ந்த செய்திகள்