கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜியின் உடல்நிலை சரியாக இருக்கும் நிலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் அனுமதிக்காததால், டெல்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சிகிச்சை பெறும் அறையைத் துணை ராணுவப்படை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருக்கிறது. மருத்துவமனையைச் சுற்றி நடக்கும் களேபரங்களை மத்திய உளவுத்துறையும், புலனாய்வுத்துறையும் ( IB and CBI ) கண்காணிக்கிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் என்ன நடக்கிறது எனத் தகவல்களை ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டறிந்துள்ளார். மறுபுறம் அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் ஆலோசிப்பதாகவும் அவர் வைத்திருந்த மின்சாரம், டாஸ்மாக் ஆகிய இரண்டில் ஒன்றைக் கைப்பற்ற சீனியர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.