ஒக்கி புயல் சேதத்தை மத்திய குழு ஏனோதானோ என்று
பார்வையிடுவதா? - கி.வீரமணி கண்டனம்
ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பல வாரங்கள் கழித்து ஏனோ தானோ என்று பார்வையிடுவதும், பிரதமரும் அதே நிலையில் நடந்துகொள்வதும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல்களாகும்; தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை என்கிற தொடர் கதைக்கு என்னதான் முடிவு? விழுவதுகூடத் தவறில்லை; எழவே முடியாத அளவுக்கு வீழ்ந்து கிடப்பதா? என்ற விழிப்பூட்டும் அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ளார்.
பெரியார் மண்ணாக திராவிட பூமியாக இருப்பதால்... 1. தமிழ்நாட்டில் பா.ஜ.க. என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமான ஆட்சி ஒருபோதும் காலூன்றிட முடியாது; காரணம், இன்னமும் அக்கட்சி மிஸ்டு காலில் நிற்கும் கட்சியாகவே இருக்கிறது. பெரியார் மண்ணாக, திராவிட பூமியாக இருப்பதால், பார்ப்பனீய - பார்த்தீனிய விஷச் செடிகளை வளர விடாது அது என்கிற உண்மை மற்றவர்களுக்குப் புரிவதைவிட மத்தியில் ஆளும் பிரதமர் மோடிக்கும், அவரது ஆட்சியினருக்கும், கட்சியினருக்கும் நன்கு புரிந்துள்ளது.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்
அதனால்தான் இங்குள்ள அ.தி.மு.க. ஆட்சி டில்லி சரணம் பாடி, நிபந்தனையற்ற அடிமை விசுவாசிகள்போல், மத்தியில் உள்ள ஆட்சியிடம் நடந்துகொண்டாலும், அவர்கள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் பார்க்கிறார்கள்! நடத்துகிறார்கள்!!
இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நீட் தேர்வில் விலக்குக் கோரி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக - எதிர்க்கட்சிகளும் இணைந்து - நிறைவேற்றி அனுப்பிய இரு மசோதாக்கள் ஓராண்டாகியும் இன்னமும் எவ்வித பதிலும் தரப்படாத நிலையில், கிடப்பில்தானே போடப்பட்டுள்ளன?
மீனவர்கள் சுமார் 400 பேரின் கதி
அண்மையில் சென்ற நவம்பரில் கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்த திடீர் ஒக்கிப் புயுலின் விளைவாக இன்னமும் கடலுக்குச் சென்ற மீனவர்கள் சுமார் 400 பேரின் கதி என்னவென்றே தெரியாது; அக்குடும்பங்கள் நிர்க்கதியில் நின்று அழுது புலம்பி ஆறாத்துயரத்துடன் உள்ளனர்! பல மீனவ சகோதரர்கள் உயிர் துறந்துள்ள சோகம் ஒருபுறம்; தங்களது பொருள் - தொழில் இழப்பு மறுபுறம்.
கன்னியாகுமரி மாவட்ட வாழை, ரப்பர் விவசாயிகள் பாதிப்பு பல நூறு கோடி ரூபாய்க்குமேல். ஏழை, எளியவர்கள் குடியிருப்புகள் இழந்து, கூரைகளும், சுவர்களும் இல்லாமல், பொதுப் பள்ளிகளிலும், மண்டபங்களிலும், வானமே கூரையான நிலையில் வாழும் கண்ணீர்க் கடலில் மிதக்கும் பல நூற்றுக்கணக்கானவர்கள்.
அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்தாற்போல்...
மத்தியக் குழு - நிவாரணம் அளிப்பதற்காக - சேதத்தை மதிப்பிட, ஆராய வந்துள்ளார்கள். எப்போது? டிசம்பர் 26, 27 இல்.
ஏறத்தாழ 5 வாரங்களுக்குப் பிறகு!
அதுவும் பாதிக்கப்பட்ட எல்லா இடங்களுக்கும் செல்லவில்லை; பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூடச் சொல்லவில்லை. ஏனோ தானோ என்று அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்தாற்போல் சென்றுவிட்டனர். மற்ற சில மாவட்டங்களில், நெல்லையில் ஒரு மணிநேரத்தில் இக்குழு ஆய்வை முடித்தது.
நெல்லையில் ஒக்கி ஆய்வு மின்னல் வேகத்தில் முடிந்தது என்று ஒரு நாளேடு தலைப்பிட்டுள்ளது.
நேற்று (29.12.2017) சென்னையில் முதல்வர் சந்திப்பு எல்லாம் நடந்தேறியுள்ளது.
பிரதமர் மோடி வந்தார் - சென்றார்!
பிரதமர் மோடி வந்தார் - ஹெலிகாப்டரில் இறங்கினார். சிறிதுநேரம் காட்சியளித்தார். ரூ.133 கோடி முதல் தவணை என்று அறிவித்துத் திரும்பிவிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் சென்று, அவர்களுக்கு ஆறுதல் கூறும் வெட்டி வேலைகளைப் பார்க்காமல் அவர் பணி முடித்துத் திரும்பி விட்டார். குஜராத், இமாச்சலப் பிரதேச வெற்றியைக் கொண்டாடிடச் சென்றுவிட்டார்!
யானைப் பசிக்கு வெறும் சோளப் பொரி
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்று! அது மாதிரி காட்சி. மாவட்ட மத்திய அமைச்சர்மீது அதிருப்தி அலைகள் ஏராளம்!
தமிழ்நாடு அரசு 13,520 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளது.
இந்த யானைப் பசிக்கு வெறும் சோளப் பொரி போட்டால் போதுமா?
அதுமட்டுமா?
ஏ, தாழ்ந்த தமிழ்நாடே!
2. கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் காமராசரால் அமைக்கப் பெற்ற மத்திய அரசு அச்சகம் இழுத்து மூடப்பட்டுள்ளதோடு, அதில் வேலை பார்க்கும் கோவை தொழிலாளிகள் மகாராஷ்டிர மாநில நாசிக் அச்சகத்திற்கு மாற்றமாம்! இது நடைமுறை சாத்தியமா? இதைவிட வேறு கேலிக்கூத்து வேறு உண்டா?
3. நாமக்கல் லாரித் தொழிலால் செழிப்படைந்தது. அதை சீரழியச் செய்ய மத்திய டெண்டர் முறை அந்தந்த மாநிலத்தவர்கள் மட்டுமே டெண்டரை எடுக்க உரிமை என்று கூறி, மற்றதில் இந்தித் திணிப்பில் தேசியம் பேசுவோர், வடநாட்டார் கொழிக்க இப்படி ஒரு கண்ணிவெடியை வைத்து நாமக்கல் தொழிலை நசியத் திட்டமிடுகின்றனர்.
4. சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளை மூடிடும் அபாயத்தால், 10 லட்சம் ஏழை, எளிய தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.
5. கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரி விலக்கு இல்லை என்பதால், கூட்டுறவு வங்கிகளைச் சிறப்பாக வளர்த்துள்ள தமிழ்நாடு பெரிதும் பாதிக்கும் நிலை உறுதி!
6. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட்டுள்ள காலி இடங்கள் ஒருபுறம், மறுபுறம் மற்ற வெளிமாநிலத்தவரின் ஆக்கிரமிப்பு - நீட் உபயத்தின்மூலம்!
ஏ, தாழ்ந்த தமிழ்நாடே, உன் நிலை இப்படியா இருப்பது?
7. நிர்வாகத்தில் - ஆட்சியில் - இரட்டை ஆட்சி; அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சி ஒருபுறம்; மறுபுறம் ஆளாளுக்கு அபத்தமாக உளறும் மைனாரிட்டி அ.தி.மு.க. அமைச்சரவை ஆட்சி என்ற காட்சி மறுபுறம்!தமிழ்நாட்டோரே சிந்தியுங்கள்!
ஒருகாலத்தில் தமிழ்நாட்டு ஆட்சியை, எடுத்துக்காட்டான ஆட்சியாக அகில இந்தியா கண்ட நிலை மாறி, இன்றோ அவர்கள் எல்லோரும் கேலி, கிண்டல் செய்யும் அலங்கோல, அவல காட்சியாக அல்லவா இருக்கிறது!
இதற்கு முடிவு என்ன? விடிவு என்ன? தமிழ்நாட்டோரே சிந்தியுங்கள்!
மக்கள் ஒன்றுபட்டு நிற்க ஆயத்தமாகவேண்டும் - உரிமைக் குரல் எழுப்பவேண்டும்.
விழுவதுகூட தவறில்லை; எழவே முடியாது வீழ்ந்து கிடப்பதா? வெட்கம்! வேதனை!!
எத்தனைக் காலம் இந்த அடிமையில் மோகம்?’’