![kasthuri](http://image.nakkheeran.in/cdn/farfuture/zC4rHVDPAwWtu7cFbSLB1-MrMvVslKD1cvzcIKHRBmA/1731212918/sites/default/files/inline-images/a1452_0.jpg)
கடந்த மூன்றாம் தேதி ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமணர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.
கஸ்தூரியின் பேச்சுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். கஸ்தூரியின் பேச்சு பூதாகரமான நிலையில் இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பை ஒன்றை நடத்தியிருந்தார். அதேநேரம் கஸ்தூரியின் கருத்து குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்ததோடு கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் இரண்டு புகார்கள், காவல் ஆணையரகத்தில் ஒரு புகார், கோயம்பேடு காவல்நிலையத்தில் ஒரு புகார் என சென்னையிலும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் எழும்பூர் போலீசார், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பேசுவது; ஜாதி, மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு மக்களிடையே கழகத்தை ஏற்படுத்துவது; அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்த ஒரு நபரையும் குற்றம் செய்ய தூண்டுதல்; அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த எழும்பூர் காவல்துறையினர் முயற்சி எடுத்தனர். நேற்று அவர் வீட்டுக்கு சம்மன் அளிக்கச் சென்ற பொழுது அவருடைய வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. அதேபோல் அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாக உள்ள நிலையில் அவரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.