கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளது மூக்கனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன் (வயது 14). இவர் தேவபாண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இருந்தும் மாணவ மாணவிகளுக்கு வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆன்லைனில் படிப்பதற்காக மணிகண்டனுக்கு ஆறுமுகம் புதிதாக ஒரு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அதன்மூலம் தினசரி பாடம் படித்துக்கொண்டிருந்த மணிகண்டன் நேற்று ஆசிரியர் ஆன்லைன் வகுப்பு பாடத்தை நடத்த, அதை வீட்டுக்கு வெளியே வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள் மாணவன் வைத்திருந்த செல்ஃபோனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர். செல்ஃபோனை பறித்துச் சென்றது கண்டு பதறித் துடித்து மணிகண்டன் அழுதுள்ளார். இருந்தும் செல்ஃபோன் திருடு போன தகவல் தந்தைக்குத் தெரிந்தால் திட்டுவார் எனப் பயந்துபோன மணிகண்டன் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து யாரும் கவனிக்காத நேரத்தில் தனது உடம்பில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் மணிகண்டனை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் மணிகண்டன். இதுகுறித்து அவரது தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்ஃபோனை பறித்துச் சென்ற மர்ம மனிதர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.