சர்வதேச கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சிறுமிகளை வைத்து ஆபாசப் படம் எடுத்த இளைஞரை சிபிஐ அதிகாரிகள் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. 35 வயது எம்.காம் பட்டதாரியான இவர் சுற்றுச்சூழல் குறித்து பி.ஹெச்.டி படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி காலை 6 மணியளவில் விக்டர் ஜேம்ஸ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, டெல்லியிலிருந்து வந்த சிபிஐ டிஎஸ்பி சஞ்சய் கவுதம் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் திடீரென விக்டர் ஜேம்ஸின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். மேலும், விக்டர் ஜேம்ஸ் தனது சோசியல் மீடியா பக்கத்திலிருந்து, பிரதமர் மோடியைப் பற்றி அவதூறு பரப்பியதாகக் கூறி அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் இருக்கும் சிறுமிகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுத்து அதை வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக இன்டர்போல் போலீசார் சிபிஐக்கு அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில், நாடு முழுவதும் 21 இடங்களில் இந்த விசாரணையும், கைதும் நடைபெற்று வந்துள்ளது. மேலும், சிபிஐ அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையில் விக்டர் ஜேம்ஸும் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகளால் விக்டர் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமிகளுடன் தனிமையில் இருப்பது போல் வீடியோ எடுத்து, அதனை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்ததும், விக்டர் ஜேம்ஸின் வீடியோவிற்கு அதிக பார்வையாளர்கள் இருப்பதும், சிபிஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, விக்டர் ஜேம்ஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூரில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.