நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு எதிரான வரைவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, சிபிசிஐடி போலீசார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக, குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் ஸ்ரீ நிஷா ஆகியோர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி சிபிசிஐடி போலீசாரின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகினர். அதேபோல, கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி சி.பி.சி.ஐ. டி போலீசார், ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, சென்னை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களை ஆராய்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீசார் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ‘ஜெகத்ரட்சகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஜெகத்ரட்சகனுக்கு எதிரான வரைவு குற்றப்பத்திரிக்கை தயாராக இருக்கிறது. நீதிமன்றம் அனுமதித்தால், அதனை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் வரைவு குற்றப்பத்திரிகையை மனுதாரர் தரப்புக்கும் வழங்கவும் தயாராக இருக்கிறோம்.‘ என்று தெரிவித்தனர்.
ஜெகத்ரட்சகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதித்தால், வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவின் நோக்கமே அர்த்தமற்றதாகிவிடும்.’ எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.
‘வரைவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால், மனுதாரர் தரப்புக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது, ஏற்கனவே உள்ள வழக்கோடு சேர்த்து வரைவு குற்றப்பத்திரிகையையும் எதிர்த்து வாதிடலாமே?’ எனத் தெரிவித்த நீதிபதி, ‘சட்டப்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக வரைவு குற்றப்பத்திரிகையை மனுதாரருக்கு கொடுக்கலாமா என்பது குறித்து, இரண்டு தரப்பும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும்.’ என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஜெகத்ரட்சகனை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை, அதுவரை நீட்டித்து உத்தரவிட்டார்.