Skip to main content

காவிரி கடைமடை தூர்வாறல்: விவசாயிகள் அடங்கிய கண்காணிப்பு குழு..! ஆட்சியர் தகவல்..!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

Cauvery shoplifting; Monitoring committee consisting of farmers ..! Collector information ..!

 

கடலூர் மாவட்டத்தில் 444 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி பாசன வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் வரும் 25ஆம் தேதிக்குள் நிறைவுபெறும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான கடலூர் மாவட்டத்தில் தற்போது குறுவை மற்றும் சொர்ணவாரி பருவத்திற்கான நெல் நடவு பணிகள் துவங்கியுள்ளன. இந்த நிலையில், பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று (12.06.2021) திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு 12 முதல் 16 நாட்களுக்குள் வந்து சேரும் என தெரிகிறது. அவ்வாறு வந்து சேரும் தண்ணீர் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதற்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

அவர் கூறும்போது, "கடலூர் மாவட்டத்திலுள்ள டெல்டா பகுதியில் 58 பாசன வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணி துவங்கப்பட்டு, இதற்காக ரூபாய் 2.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 202 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாய்க்கால்கள் சீரமைக்கப்படவுள்ளன.

 


இதேபோன்று பெரிய வாய்க்கால்களில் இருந்து பிரிந்து செல்லும் சிறிய பாசன வாய்க்கால்கள் 242 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளன. மொத்தத்தில் 444 கிலோமீட்டர் வாய்க்கால் பகுதிகள் சீரமைக்கப்படுகின்றன. 112 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளைக் கண்காணிக்க அந்தந்த பகுதி உழவர்கள், பொதுப்பணித்துறையினர், வேளாண்மைத்துறையினர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தையும் வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டு கடலூர் மாவட்டத்திற்கு வந்தடையும்போது அதனை வீணாக்காமல் பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும். நடவு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தேவையான உரம், தேவையான விதை ஆகியவை இருப்பில் உள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அந்தந்த கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்