இலங்கைக்கு வேதாரண்யம் வழியாக ஆம்புலன்சில் நூதன முறையில் கஞ்சா பண்டல்களை கடத்திய சென்னையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களிடம் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பண்டல்களையும் நாகை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வேதாரண்யத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தோப்புத்துறை அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸார், அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த ஆம்புலன்ஸில் 28 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சாப் பொட்டலங்கள் பண்டலாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட சென்னை அயனாவரம் வில்லிவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த ராஜ்குமார், மகேந்திரன், விக்னேஷ், சுந்தர் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். விசாரணையில் இருந்த போலீஸாரிடம் கேட்டபொழுது, “தேர்தலுக்காக வாகனசோதனையில் இருந்தோம், அப்போது கஞ்சா கடத்தி வருவதாக எங்களுக்கு தகவல்வந்தது. அதன்பிறகு அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தோம். அப்போது அதிவேகமாக, அப்துல்கலாம் படத்தையும், மேதகு சுபாஷ் சந்திரபோஷ் படமும் பதிக்கப்பட்ட வித்தியாசமான ஆம்புலன்ஸ் வந்தது, அதை எதார்த்தமாகவே நிறுத்தினோம், அந்த வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கடத்தி வந்து, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர்” என்கிறார்கள். உயிர்காக்கப் பயன்படுத்தப்படும் ஆம்புலன்சை, கஞ்சா கடத்த திட்டமிட்டுப் பயன்படுத்தியது போலீஸாரையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.