சிவகங்கையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பூனை சாப்பிட்டுவிட்டு வைத்த பப்ஸை விற்பனைக்கு வைத்ததாக புகார் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், நகர் நோன்பு திடல் அருகே 'சத்தியன்' திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கத்தில் நேற்று காலை காட்சியின் போது அங்குள்ள உணவு ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்த பப்ஸை பூனை ஒன்று சாப்பிட்டது. இதனை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து அந்த காட்சிகள் வைரலானது.
இந்த நிலையில் இது தொடர்பான புகார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு சென்ற நிலையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் திரையரங்கில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்ஸ், கேக், சமோசா, கூல்டிரிங்ஸ், பாப்கார்ன் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதில் பல பொருட்கள் காலாவதியாக இருந்தது தெரியவந்தது. உடனே அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் விற்பனையாளர்களை எச்சரித்துவிட்டு சென்றனர்.