கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தை ஒட்டி உள்ளது வயலூர் பகுதி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் 70 வயது மீனாம்பாள். இவர் தமிழக அரசின் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின்படி விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பணஉதவி பெற்றுவந்தார். அதைக்கொண்டுதான் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் டூவீலரில் வந்த ஒரு மர்மநபர், அந்த மூதாட்டியிடம் சென்று உட்கார்ந்து அவரிடம் அன்பாகவும் ஆதரவாகவும் ஒரு உறவினர் போன்று பேச்சுக் கொடுத்துள்ளார். அந்த மர்மநபர், தற்போது மாதம் ஆயிரம் ரூபாய் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெற்று வருகிறீர்கள். இனிமேல் உங்களுக்கு மாதம் 12 ஆயிரம் ரொக்கம், 10 கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை கிடைக்க உள்ளது. இந்தச் சலுகைகளுக்கான உத்தரவு உங்களுக்கு நேற்று மேலதிகாரியிடம் இருந்து வந்துவிட்டது. அதை உங்கள் ரேஷன் கடைக்குச் சென்று நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அதைப் பெறுவதற்கு முன்பு முன்பணமாக ரூபாய் 3,000 கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த மர்மமனிதன் பேச்சை நம்பிய மூதாட்டி, தான் மருத்துவச் செலவிற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 2,800 ரூபாய் பணத்தை அந்த மர்மநபரிடம் கொடுத்து ஏமாந்து உள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த மர்மநபர், அதற்கு பதிலாக போலியான ஒரு காசோலையை அந்த மூதாட்டியின் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார்.
இதன் உண்மைநிலை அறியாத அந்த மூதாட்டி, அந்த காசோலையை எடுத்துக்கொண்டு தங்கள் ஊரில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார். அதை அங்கிருந்தவர்களிடம் கொடுத்து, மோட்டார் பைக்கில் வந்த மர்மநபர் அதைக் கொடுத்ததையும், அதற்காக அவர் பணம் பெற்று சென்றதையும், மூதாட்டி ரேஷன் கடைக்காரர் மற்றும் அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
அந்த காசோலையை வாங்கிப் பார்த்த அவர்கள் அது போலியான காசோலை என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, தன்னை நம்ப வைத்து மோசடி செய்துவிட்டானே அந்த மர்ம மனிதன் என்று அழுது புலம்பியபடி ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது இப்பகுதியில் அவ்வப்போது நடந்துவருகிறது. இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் எப்போது போலீசிடம் சிக்குவார்களோ என்று நொந்து போய் கூறுகிறார்கள் பொதுமக்கள்.