
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளூர் வல்லடிகாரர் கோயில் என்ற பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்துவை தாக்கியதாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு எதிராக கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரையின் துணை மேயராக இருந்த மன்னன், ரகுபதி உட்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (09.02.2024) நீதிபதி முத்துலட்சுமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். இதனையடுத்து இந்த வழக்கில் 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.