கோவையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு படித்துவந்த 17 வயது மாணவி கடந்த 11ஆம் தேதி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, மாணவியின் செல்ஃபோன் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்ததில், அவருக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, உடுமலைப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஆசிரியரின் பாலியல் தொல்லை பற்றி மாணவி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்தது. அதையடுத்து பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனின் பெயரை வழக்கில் சேர்த்த காவல்துறையினர் அவரைத் தேடினர்.
அவர் தலைமறைவானதோடு செல்ஃபோனும் அணைக்கப்பட்டிருந்தது. பின்னர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்த தனிப்படையினர், அவரை கைது செய்தனர். மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து நன்கு அறிந்த பிறகும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காததால், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கோவைக்கு கொண்டுவரப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை மகளிர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி அவரை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.