அனந்தபத்மநாபன் நியமனத்திற்கு
எதிரான வழக்கு தள்ளுபடி
அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பேராசிரியர் அனந்தபத்மநாபன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தெடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக் கழகத்தில் பணியாற்றுகின்ற கவுரவ பேராசிரியர் அனந்த பத்மநாபனை நியமித்தும், துணைவேந்தர் பதவிக்கான தகுதியை மாற்றியமைத்தும் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் உச்சிமாகாளி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த வழக்கு காரணமாக, குழுவின் தலைவரான உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். லோதா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார் என்றும், இதனால் ஒரு நல்ல உறுப்பினரை குழு இழப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு,பேராசிரியர் அனந்தபத்மநாபன் தனது பேராசிரியர் பணியை ராஜினாமா செய்த பின்னர்தான், குழுவில் உறுபினராக நியமித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது, ஆனால் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது உறுப்பினராக நியமிக்கப்பட்டதால் தான் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளதாக உள்ளதே? ஏன் இப்படி முரண்பாடான தகவல்கள் வருகிறது என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து பேராசிரியர் அனந்தபத்மநாபன் நியமனம் தொடர்பான அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதனை அடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனந்தபத்மநாபன் நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யபட்டது. இதனை அடுத்து இரு தரப்பு வாதங்களுக்கு பிறகும் உத்தரவிட்ட நீதிபதிகள் மனுதரார் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
- ஜீவாபாரதி