சோடா பாட்டில் வீசுவோம் என பேசிய சடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்யக்கோரிய புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டாள் குறித்து பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயரான சடகோப ராமானுஜ ஜீயர் பேசிய போது " இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும், சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதைச் செய்ய மாட்டோம்" என்று பேசியிருந்தார்.
ஜீயரின் இந்த பேச்சு இரு பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டும் விதமாக இருப்பதால் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனவரி 28ஆம் தேதி ஜீயர் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான மாதொருபாகன் இறைப்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மீதும் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழக நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தனது புகாரில் நடவடிக்கை எடுக்க திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிடக்கோரி வைரவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து , விசாரணை நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வைரவேலின் புகாரில், முகாந்திரம் இருந்தால் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்ய நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கும், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தினருக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.