திருச்சியில் ஒயர்லஸ் சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு, அந்தப் பள்ளி உணவகத்தை ஆய்வு செய்தது. அதில் பள்ளி உணவகம் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்தது தெரியவந்தது. மேலும் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் உணவுத் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி உணவகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முன் அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் உணவகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் உணவகம் இருந்தால் புகார் அளிக்க முன்வரலாம் என்றும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.