விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள், எல்லீஸ் சத்திரம் அருகே உள்ள மைதானத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் வாகனங்களை ஓட்டி காண்பித்து உரிமம் பெற அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில், விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து, பயிற்சி பெற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொடுப்பதற்காக அந்தப் பள்ளி நிர்வாகி ஒரு காருடன் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வந்தார்.
அப்போது வாகன ஆய்வாளர்கள் இரண்டு பேர், தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனத்தை உரிமம் பெற வந்த இளைஞர் ஒருவரிடம் கொடுத்து இயக்குமாறு கூறியுள்ளனர். அந்த இளைஞர் ஓட்டிய அந்த வாகனம் தாறுமாறாகச் சாலையில் சென்றுள்ளது. இதனைப் பார்த்த மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் தங்கள் மீது அந்த வாகனம் மோதாமல் இருப்பதற்காக அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
சிறிது தூரம் சென்ற அந்த கார், சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நின்றது. வாகனத்தை இயக்கிய இளைஞர் காயமடைந்ததை அடுத்து, அவரைக் காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரிய அளவில் காயம் ஏற்படாமல் அந்த இளைஞர் தப்பித்துவிட்டார்.
ஓட்டுநர் பள்ளியில் பயிற்சி வாகனம் கற்றுக் கொள்பவர்களுக்கு, வாகனத்தை ஓட்டி காட்டாமல் உரிமம் கொடுத்திருந்தால், அப்படிப்பட்டவர்கள் சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது எவ்வளவு பெரிய விபத்து ஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன ஓட்டிகள் உரிமம் பெறுவதற்காக வரும்போது முறையான ஆவணங்களையும், அவர்கள் சாலை விதிமுறைகளின்படி வாகனங்களைச் சரியாக இயக்குகிறார்களா என்பதையும் நன்கு ஆய்வு செய்த பிறகு உரிமம் தர வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.