ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான அவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
ராஜேந்திர பாலாஜி மீது நேரடியாக எந்த இடத்திலும் குற்றச்சாட்டு இல்லாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்றும், அவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார்கள் சோடிக்கப்பட்டவை என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வாரக் காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் வெளியூர்களுக்கு எங்கும் செல்லக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதித்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கில் தமிழகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 'தமிழ்நாட்டை விட்டு வெளியேற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அனுமதிக்க முடியாது. ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை எனவே நீண்ட காலம் வழங்க முடியாது' எனத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு 45 நாட்களில் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.