வெவ்வேறு மாநிலங்களிலிருந்து ஈரோடு வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சமீப காலமாகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதைப் பொருட்கள், கஞ்சா போன்றவை கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து நிகழ்கிறது. இப்படி வரும் புகார்களின் அடிப்படையில் ஈரோடு ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஈரோடு வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பெட்டியாகச் சோதனையும் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 3ம் தேதி காலை சேலத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. ஈரோடு ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமையில் போலீசார் ராஜலிங்கம், சவுந்தரராஜ், சுஜித்கான் ஆகியோர் தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாகச் சோதனை செய்தனர்.
அப்போது பொதுப்பிரிவு பெட்டியில் சோதனை செய்தபோது பயணிகள் இருக்கையின் கீழ் ஒரு வெள்ளை நிற பை கேட்பாரற்றுக் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார், அதனைத் திறந்து பார்த்தபோது அதில் 11.50 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் கேட்டபோது இது தங்களுடையது இல்லை என பயணிகள் தெரிவித்தனர். அப்போது ஒரு வாலிபரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். அந்த வாலிபரை விசாரணைக்காக ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர் மதுரை மாவட்டம், கக்குடி அடுத்த கல்மேடு, சக்திமங்களம், களஞ்சியம் நகரைச் சேர்ந்த தென்னரசு எனத் தெரிய வந்தது. அவர், தான் கஞ்சாவை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் பின்னணியில் யார்? யார்? உள்ளார்கள் என்பது குறித்தும் அந்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.