சென்னை மணலி சாத்தாங்காடு பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய ரவுடி கும்பல் ஒன்று கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பட்டாகத்தியுடன் சாலையில் நடனமாடி ரகளையில் ஈடுபட்டனர். அத்தோடு, ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவன் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை தூக்கிச் சென்று தங்களுடன் நடனம் ஆடுமாறு மிரட்டியதால் அந்தச் சிறுவன் கும்பலிடம் இருந்து தப்பி தலைத் தெறிக்க வீட்டிற்கு ஓடி உள்ளான்.
மேலும் போதைத் தலைக்கேறிய நிலையில் ரவுடி கும்பல் அவ்வழியாக வந்த இரு சக்கர ஊர்திகளில் செல்படுபவர்களை வழிமறித்து அவர்களை வாகனத்தில் இருந்து கீழே இறக்கி கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரவுடிகள் நடத்திய அராஜகத்தால் அப்பகுதியே பதட்டத்திற்கு உள்ளாகி உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து மணலி சாத்தாங்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த நிலையில் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதின் மூலம் சமூக விரோதிகளின் குற்றச் செயல்களும் அதிகரித்து வருகிறது, இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், அரசும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் கஞ்சா சாகுபடி செய்யவும் சமூக விரோதிகள் தயங்க மாட்டார்கள் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.