புற்றுநோய் பாதிப்பு இந்திய அளவில் தமிழகத்தில் அதிகமாக உள்ளதாகவும் அதிலும் குறிப்பாக ஈரோடு மாவட்டம் மாநில அளவில் 10 ஆவது இடத்தில் இருப்பதாகவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் ஈரோட்டில் இன்று செல்வா சேரிடபிள் டிரஸ்ட், ஈரோடு கேன்சர் சென்டர், ஈரோடை அமைப்பு, இந்திய மருத்துவ சங்கம் ஈரோடு கிளை ஆகியவை சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் தொடங்கிய பேரணியை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கிவைத்தார். சம்பத் நகரில் பேரணி நிறைவடைந்தது. இதில் செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ஈரோடு கேன்சர் சென்டரில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் ஈரோடு கிளைத் தலைவர் சக்கரவர்த்தி மயிலேறு ரவீந்திரன் தலைமையில் கிளை செயலாளர் எஸ்.டி.பிரசாத், மருத்துவர் எ.பொன்மலர் ஜெ.ஜெ.பாரதி, நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கே.வேலவன், ஆர்.சுரேஷ்குமார், ஆர்.மகேந்திரன் ஆகியோர் பேசினார்கள். உலகில் அனைத்து நாடுகளிலும் புற்றுநோய் மிகமோசமாக பாதித்துள்ளது. மாரடைப்புக்கு அடுத்து புற்றுநோய் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகளை பொறுத்தவரை விபத்துகளுக்கு அடுத்து புற்றுநோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2018 இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 4.5 கோடி பேர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 1.80 கோடி பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. புற்றுநோய் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை உலகில் ஆண்டுக்கு 90 லட்சமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2.25 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் 11 லட்சம் பேருக்கு புதிதாய் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். புற்றுநோய் பாதிப்பால் ஆண்டுக்கு 7.5 லட்சம் பேர் இறக்கின்றனர். தமிழ்நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதுதான் கொடுமையான செய்தி. இதன்படி இந்தாண்டுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 1 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்து கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் வரை புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்.
புற்றுநோய் பாதிப்பில் ஈரோடு மாவட்டம், மாநில அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது. ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனைக்கு மாதம் தோறும் 150 பேர் புற்றுநோய் சிகிச்சைக்கு புதிதாக வருகின்றனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 100 பேர் வரை உள்ளனர். இந்த மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளில் 11,000-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பாதிப்பு தான் அதிகமாக உள்ளது. அதே போல் ஆண்களுக்கு நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக வருகிறது. புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளில் பொதுவானதாக, உடலில் உள்ள உறுப்புகளில் தடிப்பு மற்றும் வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம், தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்னை ஏற்படுதல், உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு, நோயின் தன்மைக்கேற்ப அறிகுறிகள் மாற்றமடையலாம்.
இதற்கு சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகத்தான் உள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை, போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.
35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் புற்றுநோய் பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றனர். ஈரோட்டில் புற்றுநோய் அதிகம் பரவ முக்கிய காரணமே சாய, சலவை கெமிக்கல் ஆலைகள் விஷ கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே காவிரி, பவானி, நொய்யல் ஆறுகளிலும் காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களிலும் விடுவது தான் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.