மோடிக்கு எதிராக பிரச்சாரம்: அய்யாக்கண்ணு கைது
மோடிக்கு நல்ல என்னத்தை வழங்கக்கோரி துண்டு பிரசுரத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபட வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புத் தலைவர் அய்யாகண்ணுவை, காவல் துறையினர் கோயிலுக்கு உள்ளே செல்லவிடாமல் கைதுசெய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் செவ்வாய்க்கிழமை மாலை 3.20 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவைக்காண 1 லட்சத்திற்கு மேல் பொதுமக்கள் கோயிலுக்கு வந்தனர். இந்நிலையில் மதியம் 2 மணியளவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புத்தலைவர் அய்யாக்கண்ணு சிதம்பரம் கோயிலுக்கு அவரது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “‘தேர்தலின்போது மோடி விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு இரட்டை விலை கொடுப்பேன். விவசாயிகளை பாதுகாப்பேன்’ என்று கூறி விவசாயிகளிடம் ஓட்டு வாங்கிவெற்றி பெற்றுள்ளார். வெற்றிக்குப் பிறகு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அவருடைய எண்ணங்கள் சரியில்லை. அவருக்கு நல்ல எண்ணங்களை வழங்க சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடக்கும் இந்த நேரத்தில் மோடிக்கு நல்ல எண்ணத்தை கொடுக்கவேண்டும் என்று சிவனிடம் ( நடராஜர்) விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கி வழிபட வந்துள்ளேன். மேலும், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுக்கிறேன் என்றீர்கள். இதுவரை கொடுக்கவில்லை. இப்போதாவது மோடியிடம் நதிகள் இணைப்புக்கு அந்த தொகையை வழங்குங்கள் என்று வலியுறுத்தியுள்ளோம். ரஜினியும் விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள 294 ஒன்றியங்களிலும் விவசாயிகள் கோரிக்கை குறித்து நடைபயணம் மேற்கொள்ளவுள்ளேன். கடலூர் மாவட்டம் வடிகால் மாவட்டமாக உள்ளது. எனவே, மற்ற மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் இந்த மாவட்டடத்தின் வழியாக வந்து கடலில் கலக்கிறது. எனவே, இதனைத் தடுக்க தடுப்பணைகளைக் கட்டவேண்டும்" என்றார். அதன்பின்னர் கோவிலுக்கு உள்ளே செல்ல முயன்ற அவரை காவல்துறையினர் அனுமதி இல்லையென்று கூறி கைது செய்துள்ளனர். இதற்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் இருந்தும் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
- காளிதாஸ்