விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் நடந்த குறை தீர்க்கும் முகாமில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
முகாமில் பட்டா மாற்றம், இலவச மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மின் துறை சம்பந்தமான உதவிகள் ஆகியன குறித்த மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். முகாமிற்கு வந்திருந்த அனைத்து பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர் அனு உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் கண்காட்சி வைக்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு மானியவிலையில் விவசாய பொருட்களை அமைச்சர் வழங்கினார். அமைச்சர் சென்ற உடன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா வேளாண்துறை அதிகாரிகளிடம், "முகாமில் நீங்கள் கலந்து கொள்வது குறித்து ஏன் முன்கூட்டியே தகவல் எனக்கு தெரிவிக்கவில்லை. நான் ஒன்றும் பியூன் கிடையாது நான் ஒரு டெப்டி கலெக்டர்" என்று மீண்டு, மீண்டும் கூறி அவர்களை வருத்தெடுத்ததுடன், தற்போது வழங்கிய எந்த பொருட்கள் குறித்தும் தகவல் பதிவு செய்ய முடியாது என்று ஆவேசமாக கூறினார்.