மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடிய இஸ்லாமியர்கள் சுட்டு கொல்லபட்டதை கண்டித்தும் மூன்று நாட்களுக்கு மேலாக திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசானது தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை அரசிதழில் அரசாணையாக வெளியிடவேண்டும். அவ்வாறு வெளியிடும் வரை இந்தப் போராட்டமானது தொடரும்.
மேலும் ஜனநாயக நாட்டில் மக்களுடைய உணர்வுகளை மதிக்காத அரசு ஒரு பாசிச அரசாகவே கருதப்படும். அப்படிப்பட்ட பாசிச அரசுகள் வென்றதாக சரித்திரம் இல்லை. அந்த வகையில் பாசிஸ்டாக விளங்கிய ஹிட்லர் அழிந்து போனார். எனவே மக்களாட்சித் தத்துவத்தின் கீழ் இயங்கக்கூடிய அரசாக மத்திய அரசு இருந்தால் ஜனநாயக போராட்டத்திற்கு மத்திய அரசு பணிய வேண்டும். பணிவார்கள், இல்லையேல் பணியவைக்கப்படுவார்கள்" என தெரிவித்தார்.