![bus](http://image.nakkheeran.in/cdn/farfuture/CXMUwBlSHpefqDBW73wAk6Mu1pUL5EAhguTk8t0eOZE/1625452314/sites/default/files/inline-images/bus2_3.jpg)
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்டங்கள் வகை 1, 2, 3 என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தமுறை அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மற்றும் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில், வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழ்நாடு அரசு கொடுத்த தளர்வுகளின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்கியது. மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டத்திற்கு இடையையேயும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.