சேலம் அருகே, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மினி பேருந்து நடத்துநரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். படிப்பை பாதியில் கைவிட்ட அந்தச் சிறுமி, வீட்டில் இருந்து வருகிறார். ஆக. 30ம் தேதி, பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மதிய வேளையில் மர்ம நபர் ஒருவர், அந்த வீட்டிற்குள் திடீரென்று அத்துமீறி நுழைந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
சிறுமி கத்தி கூச்சல் போட்டார். அப்போது அந்த ஆசாமி, கூச்சல் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த சிறுமி, மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். இதையடுத்து அவர்கள் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறை விசாரணையில், சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர், ஏற்காடு அடிவாரம் குண்டூரைச் சேர்ந்த வல்லரசு என்கிற ராஜூ (24) என்பதும், மினி பேருந்து நடத்துநர் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.