Skip to main content

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; 70 பேருக்கு காயம்! மீட்புப் பணியில் போக்குவரத்துத் துறை அமைச்சர்! 

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Bus accident in virudhachalam 70 people injured

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த சேப்பாக்கம் கிராமத்திலிருந்து இன்று காலை சுமார் 7.30 மணியளவில்  ‘22’ என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து புறப்பட்டு நல்லூர்,  மேமாத்தூர் கிராமங்கள் வழியாக விருத்தாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அவ்வாறு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, கோமங்கலம் கிராமத்தின் அருகே  வருகின்றபோது எதிரே ஒரு டாட்டா ஏஸ் வாகனம் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம் அரசுப் பேருந்து நடத்துநர் சரவணன் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, தாறுமாறாக ஓடி பயணிகளுடன் அருகே செல்லும் பாசன வாய்க்காலில் தலைக்குப்புற  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கதறி கூச்சலிடும் சத்தம் கேட்டு கோமங்கலம் கிராமத்தினர் உடனடியாக  சென்று பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாகவும், தீயணைப்பு வண்டி மூலமாகவும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 70 பயணிகளுக்கு தலை, கை, கால்கள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த அடியுடன் காயங்களும் ஏற்பட்டது. பேருந்தை ஓட்டி வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணனுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 

கிராமப்புறங்களில் இருந்து நகரத்துக்குச் செல்லும் அரசுப் பேருந்து என்பதால் தினசரி வேலைக்குச் செல்லும் பெண்களும், மாணவ மாணவிகளும் என சுமார் 80க்கும் மேற்பட்டோர் இந்தப் பேருந்தில் பயணித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் அவரது உறவினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. 

 

Bus accident in virudhachalam 70 people injured

 

அதேசமயம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாததால், விபத்தில் சிக்கியவர்கள் வராண்டாவில் அமரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிகளவில் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் கூட்டம் நிரம்பியதால் காவல்துறையினரும், மருத்துவர்களும் திணறினர்.

 

இதனிடையே அவ்வழியே சென்ற தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருந்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வசதி செய்து தரக்கோரியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சம்பவ இடத்திலிருந்து மீட்பு பணியில் அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்