தகுதிநீக்கம் என்ற பெயரில் மிரட்டப் பார்க்கிறார்கள்:
எம்.எல்.ஏ. வெற்றிவேல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.
கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி அவர்களை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க. அம்மா அணிக்கு கொறடா நியமிக்கப்படாததால் இந்த உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என்கின்றனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள். தகுதி நீக்கம் தொடர்பான பரிந்துரை குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலிடம் கேட்டபோது, “தகுதி நீக்கம் என்ற பெயரில் எங்களை மிரட்டப் பார்க்கிறார்கள். எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். மேலும் எம்.எல்.ஏ.க்கள் இணைவதை தடுக்கவே தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து கொடுத்த கடிதம் செல்லும்போது எதிர்த்து கொடுத்த கடிதமும் செல்லும். எங்களை தகுதி நீக்கம் செய்வதாக இருந்தால், முதலில் நிலுவையில் உள்ள கொறடா பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்கட்டும். தகுதிநீக்கம் செய்ய முயன்றால் நீதிமன்றத்திற்கு செல்வோம்” என்றார்.
படங்கள்: ஸ்டாலின்