சென்னையில் மாலை நேர டியூசனுக்கு சென்ற மாணவிகளுக்கு டியூசன் டீச்சரின் காதலன் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதற்கு டியூசன் டீச்சரும் உடந்தையாக இருந்தது தெரியவந்து தற்போது இருவரும் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராயநகரில் சஞ்சனா என்பவர் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். சஞ்சனாவிடம் டியூஷன் பயின்று வந்த மாணவியின் பெற்றோர் ஒருவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில் தனது மகள் செல்லும் டியூஷன் சென்டருக்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் பாலாஜி என்ற ஒருவன் தனது மகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கண்ணீரோடு குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் உடனடியாக மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக இது தொடர்பான விசாரணையில் இறங்கினார்.
புகாரில் குறிப்பிட்டபடி மாணவியை கொடுந்துயருக்கு உள்ளாக்கிய பாலாஜியை கைது செய்தனர். பாலாஜியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாலை நேர டியூஷன் சென்டர் நடத்தி வந்த சஞ்சனாவும் இந்த பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து உடனே டியூஷன் சென்டர் நடத்தி வந்த சஞ்சனாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்கள் இருவர் மீதும் வன்புணர்ச்சியில் ஈடுபடுதல், பாலியல் வன்கொடுமை, மிரட்டி வழிப்பறி செய்தல், மரண பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டியூசன் டீச்சர் சஞ்சனாவிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கைதான பாலாஜியும் தானும் காதலித்து வந்ததாகவும், திடீரென பாலாஜி தன்னை ஒதுக்கியதாக கூறிய சஞ்சனா, தன்னை காதலிக்க வேண்டும் என்றால் தான் என்ன செய்ய வேண்டும் என பாலாஜியிடம் கேட்டேன். அதற்கு பாலாஜி உனது டியூசன் சென்டரில் படிக்கும் மாணவிகளை எனக்கு நெருங்கிப் பழகும் வகையில் என்னை அறிமுகப்படுத்தி வை என்று தன்னிடம் கூறினான் என விசாரணையில் சஞ்சனா கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மாணவி ஒருவரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு பங்களாவிற்கு சஞ்சனா பாலாஜி அழைத்துச் சென்று அந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து அந்த மாணவியிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாக சஞ்சனா கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டியூசன் சென்டரில் படித்த மாணவிகள் மட்டும் அல்லாது வேறு சில மாணவிகளிடமும் பாலாஜி அத்துமீறி இதுபோல் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தது சஞ்சானவிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.