கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மகன், தந்தையின் கண்ணெதிரே கடலில் மூழ்கி மாயமான சம்பவம் சக மீனவர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், அவரது மகன் ராஜபாண்டியன் (16). நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இருவரும் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். வழக்கம்போல் கடலில் மீன் பிடித்து விட்டு நாகை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றம் காரணமாக நாகை துறைமுக முகத்துவார பகுதிக்கு வந்த விசைப்படகு திடீரென ராட்சச அலையில் சிக்கியது. அப்போது படகு கடலில் சுற்றி சுழன்றதால் படகில் இருந்த தந்தையும், மகனும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் கடலில் விழுந்த சுப்பிரமணியன் கரை சேர்ந்த நிலையில், அவரது மகன் ராஜபாண்டியன் அவர் கண் முன்னே கடலில் மூழ்கி மாயமானார்.
இதையறிந்து அங்கு விரைந்து வந்த கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசார், தீயணைப்புத் துறையினர், அக்கரைப்பேட்டை கிராம மக்கள் ஆகியோர் மாயமான ராஜபாண்டியனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தந்தையோடு மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் கடலில் மூழ்கி மாயமானதை எண்ணி துறைமுகத்திற்கு ஓடிவந்த அவரது உறவினர்களும், சக மீனவர்களும் கதறி அழுதனர். பள்ளி விடுமுறை என்பதால், தந்தைக்கு உதவியாக மீன்பிடிக்கச் சென்ற மகன் தந்தை கண்ணெதிரே கடலில் மூழ்கி மாயமான சம்பவம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் மற்றும் அவரது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.