திருச்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் இன்று வழக்கம் போல பள்ளி முடிந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ் என்பவரின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து அவனை அழைத்துச் செல்ல வந்தபோது மாணவனை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் பள்ளி முழுவதும் தேடி உள்ளனர். அதற்குள் அவர்களது உறவினர்களுக்கும் மாணவனை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களும் பள்ளிக்கு வந்து மாணவனை காணவில்லை என்பதை அறிந்ததும் பள்ளி ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனை தடுக்க சென்ற பள்ளி தாளாளர், மேலாளர், உடற்கல்வி ஆசிரியர், வாட்ச்மேன் ஆகியோரை தாக்கி உள்ளனர். இதனை அறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார், ரகளையில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், காணாமல் போன மாணவன் குறித்து விசாரித்துவந்தனர்.
அப்போது மாணவனின் பெரியப்பா சிறுவனை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு வந்தார். அவரிடம் காவல்துறை விசாரித்தபோது, பெற்றோர்கள் தாமதமாக வந்ததால் மாணவன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கும் பெற்றோர் இல்லாததால் தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதையடுத்து மாணவரை பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் பள்ளிக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி பணியில் இருந்தவர்களை தாக்கிய இருவரை கைது செய்துள்ளனர்.