Skip to main content

திறந்தவெளியில் பிணங்கள் எரிப்பு... கதறும் கிராம மக்கள்!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Bodies cremated in the open ... screaming villagers

 

துறையூர் தாலுக்கா நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். பெரும்பாலும் இந்தப் பகுதியில், மழைக் காலங்களில் கால்வாய்களில் ஓடும் நீரை சேமித்து வைத்து, பாசனம் நடைபெற்றுவருகிறது. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் இந்தக் கிராமத்தில் உள்ள காட்டாற்று கால்வாய் வாரி பகுதிக்குள் தங்கள் கிராமத்தில் இறப்பவா்களை அருந்ததிய சமூகத்தைச் சோ்ந்தவா்கள் இங்கு கொண்டு வந்து எரித்துவருகின்றனா். 50 ஆண்டுகாலத்திற்கு முன்பு ஆங்காங்கே குடிசைகள் இருந்தன.

 

தற்போது மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்ததால் கிராமப்புறங்களிலும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இன்றுவரை இதே நடைமுறையை இந்தச் சமூகத்தினா் தொடர்ந்து பின்பற்றிவருகின்றனா். தற்போது நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்துவரும் பெருமாள் என்பவருக்கு சொந்தமான வயல் பகுதி காட்டாற்று கால்வாய் வாரி பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் அருந்ததிய சமூகத்தினர் வாரிக்குள் உள்ள இடத்தில் பிணத்தைக் கொண்டுவந்து எரிப்பார்கள். ஆனால், தற்போது வாரியின் கறை மேலேயே வைத்து எரிக்க ஆரம்பித்துள்ளனா். அவா்கள் திறந்தவெளியில் ஊரை ஒட்டியுள்ள பகுதியில் பிணங்களை எரிப்பதால், சிறுபிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனா். பயத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. அதேபோல் பிணம் எரியும்போது அந்தப் புகையுடன் கூடிய வாடை, யாரும் வீட்டில் இருக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. 

 

சில நேரங்களில் இரவு 11 மணிக்கு மேல் கொண்டுவந்து எரிக்கின்றனா். அதுவும் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது. “யாராது தெரியாதவா்களை இங்கு கொண்டுவந்து எரித்துவிட்டு, நாளை பிரச்சனை ஏற்பட்டால் கிராமத்தில் இருக்கும் எல்லாரும் பதில் சொல்ல வேண்டிய நிலைவரும் என்று கூறுகின்றனா். வயலின் கரையிலேயே தற்போது பிணங்களை எரிப்பதால் சிறு பொறிபட்டால் கூட பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசமாகிவிடும். நாங்கள் பலமுறை கூறியும் அவா்கள் கேட்பதாக தெரியவில்லை. எனவே அரசு உடனடியாக அவா்களுக்கான இடத்தை ஒதுக்கி கொடுத்து அதை ஊருக்கு வெளியே மக்கள் வசிக்கும் இடத்தைவிட்டு சற்று தள்ளி இடுகாட்டைக் கட்டிக்கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனா். பொதுவெளியில் பிணத்தை எரிப்பது ஊருக்குள் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுவரை அவர்களுக்கென்று ஒரு நிரந்தரமான இடம் இல்லாததால், இப்படி பொதுஇடங்களில் பிணத்தை எரிக்கின்றனா். அரசு உடனடியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

சார்ந்த செய்திகள்