சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக தொடர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 21ம் தேதி முதல் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சனிக்கிழமை மருத்துவ மாணவர்கள் 500-க்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து கருப்பு கொடியுடன் இரத்தத்தால் கைரேகை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசுலிக்கும் கல்வி கட்டணத்தை ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.