தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், 08.07.2021 அன்று பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் அவர் தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், இன்று (14.07.2021) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''நம்முடைய கட்சியில் அனுபவம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரி பதவிகள் கொடுப்பார்கள். பார்த்தீர்கள் என்றால் தமிழக பாஜகவில் இருந்து பல பேருக்கு அகில இந்திய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. கமிஷனில், கமிட்டியில், மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட், கவர்னர் என பதவிகள் கொடுப்பார்கள். அதேபோல் ஒருபக்கம் இளமையானவர்களும் கட்சிக்குள் இருப்பார்கள். மற்ற கட்சிகளில், குடும்ப கட்சிகளில் குடும்பத்தில் இருப்பவர்களே பொறுப்புக்கு வருவார்கள். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் வயது என்பது முக்கியம் கிடையாது. இது ஒரு கூட்டு முயற்சி. ஒருபக்கம் இல. கணேசன் போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள், மற்றொருபுறம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த கட்சிக்காக உழைத்து, பலபேரால் தாக்கப்பட்ட நரேந்திரன் போன்றவர்களும் இருக்கிறார்கள். எனவே இது தனிமனித கட்சி கிடையாது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வரும்” என்றார்.
கோவை வழியாக சென்னை வரும் அண்ணாமலைக்கு வரவேற்பளிக்க தமிழ்நாடு பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கோவையில் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.