திருச்சியைவிட தொற்று அதிகம் உள்ள பல மாவட்டங்களில் மார்க்கெட் இருக்கும் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்படும் நிலையில், திருச்சி மாவட்ட நிர்வாகம் சில்லரை வியாபாரிகளை காந்தி மார்க்கெட்டில் வியாபரம் செய்ய அனுமதிக்க மறுக்கிறது. இதனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி சார்பில் பாலக்கரை அரியமங்கலம் கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
திருச்சி, காந்தி மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான சில்லரை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக அவர்கள் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
இதில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநில வர்த்தக அணிச் செயலாளர் எம்.பி முரளிதரன், “திருச்சியில் தற்போது நோய்த் தொற்று மிகவும் குறைந்துள்ள நிலையில், காந்தி மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதியளிக்க வேண்டும்.
பேருந்து போக்குவரத்து சேவை துவங்கியும் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி மறுப்பதைக் கண்டிப்பாக ஏற்றுககொள்ள முடியாது. மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, காந்தி மார்க்கெட்டில் தங்குதடையின்றி வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதியுளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.