தமிழகத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்த எல்.முருகன், மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக நேற்று (07/07/2021) பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் எல்.முருகன் இன்று (08/07/2021) காலை டெல்லியில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் விதிப்படி ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க முடியும் என்பதால், தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஜெ.பி.நட்டா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலையின் பின்னணி குறித்து பார்ப்போம்!
கரூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை, பொறியியல், எம்.பி.ஏ. படித்துள்ளார். 2015- ஆம் ஆண்டு முதல் 2016- ஆம் ஆண்டு வரை உடுப்பி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர், 2016- ஆம் ஆண்டு முதல் 2018- ஆம் ஆண்டு வரை சிக்கமகளூரு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக அண்ணாமலை பணியாற்றினார். 2018- 2019- ஆம் ஆண்டு வரை பெங்களூரு தெற்கு காவல் துணை ஆணையராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ். பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு தமிழக பா.ஜ.க.வின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.