பீகார் தேர்தலில் பா.ஜ.க. போட்ட திட்டத்தை போலவே, தமிழகத்தில் அமல்படுத்த முடிவு செய்திருக்கிறார் பாஜகவின் தேர்தல் வியூகம் வகுப்பாளரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா.
சென்னைக்கு 20ஆம் தேதி வரும் அவர், தேர்தல் வெற்றிக்கான வழிகள் குறித்து தமிழக பா.ஜ.க.வினருடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக கருத்து கணிப்புகளும், ரகசிய சர்வேக்களும் சொல்கின்றன. இதனை பாஜக தலைமை ரசிக்கவில்லை. இந்த தேர்தலில் சட்டமன்றத்துக்குள் பா.ஜ.க. நுழைய முடியாவிட்டால் அதன்பிறகு எப்போதும் முடியாது என்பதே பா.ஜ.க. தலைவர்களின் மனக்கிலேசமாக இருக்கிறது.
தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதால் அதற்கான வழிகளை ஆராய்ந்திருக்கிறார்கள் பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும். அந்த ஆராய்ச்சியில், தி.மு.க.வின் வாக்கு வலிமையில் சேதாரமாக்கினால்தான் அதன் வெற்றியை தடுக்க முடியும் என கணக்கிட்டுள்ளது பா.ஜ.க. தேசிய தலைமை. அப்போது அவர்களுக்கு கிடைத்த துருப்புச் சீட்டுதான் மு.க.அழகிரி.
தி.மு.க.வில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடிதான் இருக்கிறது. அந்த அதிருப்தி நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது. காரணம், தி.மு.க.வைவிட்டு வெளியேறி தாங்கள் அடைக்கலமாக ஒரு வலிமையான கொலுக் கொம்பு இல்லாமல் இருப்பதுதான்.
இதனை உணர்ந்துள்ள பா.ஜ.க. தலைவர்கள், ‘மு.க.அழகிரியை தனிக்கட்சி ஆரம்பிக்க வைப்பதன் மூலம் தி.மு.க.வின் அதிருப்தியாளர்களை வெளியே கொண்டு வர முடியும். அதிருப்தியாளர்களை அழகிரியால் ஒருங்கிணைக்க முடியும். இதன் மூலம் தி.மு.க.வின் வாக்கு வலிமையை குறைக்கலாம் என திட்டமிட்டு, அழகிரியை தனிக்கட்சி ஆரம்பிக்க வைக்க அவரிடம் ரகசிய பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறது பா.ஜ.க. ரஜினியை பெரிதும் நம்பும் அழகிரி, ரஜினி வராவிட்டால் பா.ஜ.க.வுடன் கைக்குலுக்குவார்’ என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.