தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சாக்கோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பாஜகவின் ஓபிசி அணி மாநிலச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவரின் பெயர் நாச்சியார் கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ள ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கருப்பூரை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் கார்த்திகேயன் வீட்டிற்கு பின்புறமாக உள்ளது. இந்த நிலத்தில் இருந்து 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை தனக்கு இலவசமாக எழுதித் தர வேண்டும் என சிவகுமாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிவகுமார் கடந்த 26ம் தேதி நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் இது குறித்து கார்த்திகேயன் மீது புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீசார் கார்த்திகேயன் வீட்டுக்கு நேற்று செல்லும் போது தனது வீட்டிற்கு போலீசார் வருவதைக் கண்டு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதனையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து வெடிபொருட்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், டி.வி.ஆர் கன்ட்ரோல் யூனிட் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். போலீசார் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக நிர்வாகி வீட்டில் பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.