தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் இந்தித் திணிப்பு கொள்கைக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிந்தார். அப்போது பேசிய அவர் "நம் தாய் மொழியை வளர்க்கவும் பிற மொழி ஆதிக்கத்திலிருந்து காக்கவுமே திராவிட இயக்கம் தோன்றியது. இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக்கொண்டே இருக்கிறோம். ஆதிக்க சக்திகளும் விடுவதாக இல்லை. இது மொழிப்போராட்டம் மட்டும் அல்ல. தமிழினத்தை தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். தொடரத்தான் செய்வோம்.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக இந்தி மொழித் திணிப்பைத் தனது வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆட்சி நிர்வாகத்திலிருந்து கல்வி வரை இந்தி மொழியைத் திணிப்பதன் மூலம் தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிக்கத்தான் என நினைக்கிறார்கள். ஒரே நாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இனத்தின் மொழியை அழிக்கப் பார்க்கிறார்கள்" என்றார்.
இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த தீர்மானம் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக பேச பாஜகவைச் சேர்ந்த நயினார் நகேந்திரனை சபாநாயகர் அப்பாபு அழைத்தார். அவர் எழுந்து சில வினாடிகள் நின்ற நிலையில் அதனைக் கவனித்த அப்பாபு "சும்மா தமிழ்ல பேசுங்க..." என்று கூறி நயினார் நாகேந்திரனை பார்த்து சிரித்தார். சபாநாயகரின் இந்த திடீர் கமெண்டால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.